இதழ் · சிற்றிதழ் · தடம் · தமிழ் · பத்திரிகை · பிற

தடுமாறாத் ‘தடமா’ ?

thadam

 

பேரிதழ்களால் செய்ய முடியாதவற்றையும் , கடக்க இயலாத வழிகளையும் , தடைகளையும்  அடித்து நொறுக்கி தனக்கான கொள்கை மற்றும் தத்துவத்துடன், தான் சரி என நம்பும், சமுதாயத்தினை முன்னோக்கி கொண்டு செல்லும் கொள்கைகளை எவ்வித சமரசமும் இன்றி உயர்த்தி பிடிக்க உருவானதுமே சிற்றிதழ்கள்.

வெகுசன இதழ்களின் செயல்பாடுகள் பல்வேறு சமரசங்களின் அடிப்படையிலானது. அதில் வணிக,அரசியல்,வாசகர்களுடனான சமரசம் முதன்மையானவை. ஒரு பக்கம் வணிக புரவலர்களின் மனம் கோணாமலும் மறுபுறம் தன்னரசியலை நிகழ் கால அரசியல் ஆட்டங்களின்பால் பக்கச் சாய்வுடன் இருந்தும் இல்லாதது மாதிரி நிகழ்த்திக்கொண்டும், கேளிக்கை பொழுதுபோக்கு போன்றவற்றை பெரும்பான்மை வாசகர் விருப்பம் என்பதாக தெரிவித்தபடி குறைவாக கொடுப்பதுபோல் அதீதமாக வெளியிட்டு தனது வணிக நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்தலே வெகுசன வணிக பேரிதழ்களின் செயல்பாடுகள்.

சிற்றிதழ்கள் சிறு குழுக்களால் முன்னெடுத்து சிறு வட்டம் கொண்ட வாசக பரப்பின் ஆடுகளம் போல் செயல்படுபவை. சமரசங்களுக்கு அங்கு இடமில்லை. சமரசமன்றி வேறு வழியில்லை எனும் சூழலில் கூட தமது கொள்கை, தத்துவ பின்னணிக்கு மாறாக இயங்குவதில்லை. அவ்வாறான சூழலில் தனது இயக்கத்தைக் கூட அவை நிறுத்தி கொள்கின்றன. பல்வேறு இக்கட்டான நிலையிலும் பொருளாதார நெருக்கடியிலும் சிற்றிதழ் நடைபெற்றது வெறும் பொழுதுபோக்க அல்ல. மாறாக வழமையான பாதையில் செல்லும் பேரிதழ் வணிக இதழ்களுக்கு எதிர் நிலை கொண்டு இலக்கிய தத்துவ சிந்தனை மாற்றங்களை முன்னிறுத்திய கொள்கைக்காகவே.

தனக்கான பெரும் வாசக பரப்பு, நிதி ஆதாரம் ஆகியவை வெகுசன வணிக பரப்பினால் வந்தவை எனும்போது தனது கொள்கையும் அந்த பெரும் கூட்டத்துடன் ஒத்திசைந்து செல்வதாகவே அமைகிறது. காற்றின் திசை போக்கில் தனது கொள்கையையும் கொண்டிருப்பது வணிக இதழ்களுக்கு உவப்பாக இருக்கலாம். இது இந்த தொழில் சிறப்பாக செல்கிறது…இதில் முதலிடலாம் என்பதன்றி வேறென்ன? பெருகி வரும் கல்வி சூழலில் தமிழ் சமூகம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாசிப்புக்கு செல்வது ஒரு மகிழ்வான காலகட்டம் எனினும் இது சிற்றிதழ்களின் ஓயாத உழைப்பால் உருவாகி வந்தவையே. அந்த உழைப்பின் பின்னால் பெரும் தியாகம் இருப்பதை எவர் ஒருவரும் மறுக்கப் போவதில்லை.

சிற்றிதழ்கள் காலப்போக்கில் பேரிதழ் எனும் நிலை நோக்கி செல்லும் போது அதை விட்டுவிட்டு புதிய சிற்றிதழை க.நா.சு. தொடங்கினார் என்று படித்த நினைவு வருகிறது. ஏனெனில் பேரிதழாக மாறுவது சமரசங்களுக்கு இட்டுச் செல்லும். அது சிற்றிதழின் நோக்கத்தை சிதறடிக்கும். அதற்காக சிற்றதழில் எழுதுவோர் வெகுசன இதழ்களுக்கு வரக் கூடாது என்றில்லை. ஆனால் அங்கே இரு தரப்பு வாசகர்களுக்கும் ஆன சமரசப் புள்ளியில் நின்று எழுத வேண்டி வரும். ஒன்றின் தரம் உயரும் போது மற்றது குறைகிறது.

வெகுசன வணிக இதழ்களை சிற்றிதழ் தரத்தில் நடத்திட முடியாது. அது அதன் செயல்பாடல்ல. சிற்றிதழ்களால் எல்லோருக்கும் நல்லவனாக இயங்கிட முடியாது. அது அதன் கொள்கையல்ல.

சிற்றிதழ் ஒன்று துவங்கும் போது எதன் பொருட்டு உருவாகிறது? எந்த சூழல் அதன் இயல்பான உருவாக்கத்திற்கு வழிகோலியது? பொதுவான கலாசார, சிந்தனை மாற்றத்திற்கு எந்த மாதிரியான தத்துவத்தை அது முன்னிறுத்துகிறது? நிகழ் கால இலக்கிய, கலாசார, அரசியல், பொருளாதார, கலை, சிந்தனை ஓட்டத்தின் பிரச்சினை, பற்றாக்குறை என்ன? அதை போக்க இவ்விதழ் கொண்ட கொள்கை என்ன? தாம் விரும்பும் மாற்றம் என்ன? செயல்திட்டம் என்ன? என்பதை விளக்கும் கட்டுரையுடன் வெளியிடப்படும்.

உருவடிவம் எப்படி இருப்பினும் உள்ளடக்கம் செறிவுடன் இருப்பதே சிற்றிதழின் கம்பீரம். தொழிநுட்ப வளர்ச்சி இன்று எல்லா சிற்றிதழ்களும் நல்ல உருவடிவத்துடன் வரச் செய்கிறது.

பொதுவான அமைப்பினுள் செயல்பட வேண்டி உள்ளதால் பேரிதழ்களால் அடிக்கடி உருமாற்றம் (உள்ளடக்கத்தில்) செய்ய வேண்டியுள்ளது. சிற்றிதழ்கள் அமைப்பிற்கு வெளியில் செயலாற்றுவதால் அடிக்கடி இயக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியிருந்தது/இருக்கிறது. மேலோட்டமான பெரும் வாசக பரப்பு பேரிதழுக்கு முக்கியம். ஆழ்ந்த குறுகிய வாசக பரப்பு சிற்றிதழின் அடிப்படை.

வெகுசன வணிக பேரிதழ்கள் தன் துணை வியாபாரமாக சிற்றிதழ் பிரதிபலிப்புடன் இலக்கிய இதழ் தொடங்கினாலும் மாயக்கண்ணாடி போலத்தான் தெரிகிறது. எப்படி பல்கலைக்கழகங்களால் தமிழ் வளர்வதில்லையோ அவ்வாறே இலக்கிய போக்கின் மாற்றம் வளர்ச்சி ஆகியவையும் வணிக பேரிதழ்களால் வெளியிடப்படும் சிற்றிதழ் போன்ற ஒரு இதழால் நிகழ்வதில்லை. (அது மாறினால் மகிழ்ச்சியே)

இங்கொன்றும் அங்கொன்றும் தீவிர இலக்கிய சிந்தனைகளை வடிப்பதால் பேரிதழ்களால் சிற்றிதழ்களின் இருப்பை கைக்கொள்ள முடியாது. ஒரு தீவிர எதிர் அரசியல் நிலைப்பாடு எடுக்கும் கட்டுரை வெளியிட அதன் நிர்வாகம் சுதந்திரம் அளிக்குமா என்பது சந்தேகமே . ஏனெனில் அவ்விதழ் அதன் துணை வியாபாரம். சிறு வாசக பரப்பிற்காக பெரும் வணிகத்தை அது விட்டுவிடாது. அதன் முதன்மை வணிகத்துக்காக வேண்டுமானால் இலக்கிய இதழ் செயல்பாடுகளில் சமரசம் செய்துகொள்ளும்.

அதே நேரம் பக்க வரையறை போன்ற நிர்வாக சூழல் அவ்விதழ்களை நீர்த்து போகச் செய்யலாம். இதற்கு வணிக நிர்பந்தம் ஒரு காரணமாகவும் உள்ளது. அதற்காக தனது தரத்தில் இருந்து இறங்கி வராமலிருக்கவோ நிறுத்திக் கொள்ளவோ  பேரிதழ்கள்  ஒன்றும் சிறு குழுக்களால் நடத்தப்படும் சிற்றிதழ்கள் அல்ல.

நெடிய பாரம்பரியம் மிக்க விகடன் இலக்கியத்தில் தடம் பதிக்க வேண்டிய சூழல் என்னவென தெரியவில்லை. இது மற்றுமொரு கிளை எனில் அதனால் ஒரு பயனும் இல்லை.சமரசம் செய்ய வேண்டிய தேவை  இல்லாத அளவுக்கு நிதி ஆதாரம் அதனிடம் உண்டு. மேற்சொன்ன காரணமின்றி காரியம் செய்ய வந்திருந்தாலும்  அதன் நோக்கத்தை பாராட்டத்தான் வேண்டும்.

எனினும் அதன் போக்கை முதல் இதழில் கண்டறிய இயலாதுதான்.ஓரிரு வருடம் கழித்து தெரிந்து கொள்ளலாம்.

இடதா, வலதா, நடு நிற்பதா,
எல்லாவற்றையும் ஊடறுக்கும்
வெளியா இல்லை
செம்புலப் பெயனீரா
எது அதன் இயல்பென்று
இனி வரும் தடம் பார்த்து
புரிவோம்.

Advertisements

கருத்து சொல்க

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s