எழுத்தாளர்கள் · கட்டுரை · கானுயிர் · சூழலியல் · தியோடர் பாஸ்கரன் · படைப்பு · புத்தகம் · வாசிப்பு · விமர்சனம்

தாமரை பூத்த தடாகம்

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டைச் சுற்றிலும் மரமிருந்தது. அதில் ஏராளமான அணில்களும், சிட்டுக் குருவிகளும் வந்தமரும். சற்றுத் தள்ளியுள்ள வேலி, கிளுவை மரங்கள் அடர்ந்த புதரில் செம்போத்து எனும் அழகிய பறவையும், தூக்கணாங்குருவிக் கூடுகளும் இருந்தன. அவை எல்லாம் இப்போது போன இடம் தெரியவில்லை. மரங்கள் ஒரு சில ஆகிவிட்டதால் பறவைகள் பறந்துபோய் விட்டன.

நானும் என் அப்பாவும் ஒரு அரிசி தூற்றும் முறத்தை எடுத்து அதை நிறுத்தினாற்போல் வைத்து அதைத் தாங்கிப் பிடிக்க ஒரு சிறிய குச்சியும் அதன் அடியில் ஒரு நீளமான கயிறும் கட்டி வாசலில் வைப்போம். அதன் அடியில் கம்பு, அரிசி இறைத்துவிடுவோம். வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளிருந்து சிறிய ஓட்டை வழியாக கயிறைப்பிடித்துக் காத்திருப்போம். சிட்டுக் குருவிகள் ஓடிவந்து தானியங்கள் தின்றுவிட்டு ஓடிவிடும். எவ்வளவோ முயன்றும் அன்றைக்கு எங்களால் சிட்டுக் குருவிகளைப் பிடிக்க முடியவில்லை. துரத்தவும் முடியவில்லை. இன்றைக்கு ஊருக்குப் போகும்போதெல்லாம் தேடுகிறேன். சிட்டுக் குருவி கண்ணில் படுவதேயில்லை.

thaamarai

தியோடர் பாஸ்கரன் எழுதிய தாமரை பூத்த தடாகம் நூலை வாசிக்கையில் மனதிலிருந்து பல நினைவுகள் உதிர்ந்த சிறகு போல விழுந்தது. இயற்கை பற்றிய பொதுவான அறிவே இல்லாமல் தான் இளந்தலைமுறை வளர்ந்து வருகிறது. இயற்கை அறிவு கொண்டவர்களாலும் கூட உலகமயமாக்கலால் விளைந்த சூழல் பாதிப்புகளை எதிர்த்து எதுவும் செய்ய முடிவதில்லை. திருப்பூரின் நொய்யல் ஆறு சாக்கடையானதே இதற்கு சாட்சி.

ஏப்ரல், மே மாதங்களில் காணப்படும் வெயிலும் வெக்கையும் குடிநீர் பஞ்சமும் தான் மழையைப் பற்றியும், மழைக் காடுகள் பற்றியும், மரங்களை வெட்டக் கூடாது என்பது மட்டுமின்றி வளர்க்கவும் வேண்டும் என்ற திடீர் எண்ணங்களையும் தோற்றுவிக்கிறது. பிறகு மழைக் காலம் ஆரம்பித்தவுடன் அது குறித்து கண்டுகொள்வதேயில்லை.

பறவைகளின் கீச்சொலியும், சருகுகளின் சிலிர்ப்பும், இலைகள் மீது சிதறி விழும் மழைத் துளியோசையும் எப்போதும் பிரபஞ்சத்தின் பேரொலியாகவே தெரிகின்றன.

காடுகளில் சுற்றி கானுயிரைக் காணும் நல் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வலியச் சென்று வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவர்களாலே அது முடியும். தியோடர் பாஸ்கரன் தன் வாழ்நாளில் கண்டுணர்ந்த கானுயிர் செல்வத்தையும், வளத்தையும் கட்டுரைகளாக புனைந்த தொகுப்பான தாமரை பூத்த தடாகம் சூழலியல் குறித்த மெய்யான விழிப்புணர்வையும், இது வரை கண்டுகொள்ளாத சூழியல் அறிவின்மையை உணர்த்தும் ஒரு படைப்பாகவும் உள்ளது.

கோவையின் மருதமலை வழியாக ஏறி அந்தப் பக்கம் இறங்கி நடந்து சென்று தடாகம் வரை காட்டு வழியே சென்றதையும், குற்றாலத்தில் உள்ள பக்கிள் பாதை வழியாக கானகத்தை கண்டதையும் ரசித்து எழுதியிருக்கிறார். இதில் காண்பதற்கரிய தாவரம், விலங்கினங்களைக் காணக் கிடைத்த மகிழ்ச்சியை தியோடர் பாஸ்கரன் விவரித்திருப்பது சூழலியல் ஆர்வலர்களை மட்டுமல்ல எளிய வாசகனையும் கானுயிர் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும் அவற்றைப் பாதுகாப்பதற்கு தன்னாலியன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்ற அவாவையும் ஏற்படுத்தும்.

இந்நூலில் அவர் கூறும் கானுயிர்களைப் பட்டியிலிட்டுக் காண வேண்டும் என்றால் அதற்குத் தனியான வலிமையான முயற்சி வேண்டும். ஆப்பிரிக்க கிளி, கடல் ஆமை, காலணி ஆர்கிட் மலர், ஆள்காட்டிக் குருவி, இமய வரையாடு, உடும்பு, கடமான், கருமந்தி, கருநாகம், காட்டுக்கோழி, காட்டுப்பூனை, காட்டெருது, காட்டெருமை, கானமயில், கூழைக்கடா, கோவேறு கழுதை, சிங்கவால் குரங்கு, செம்பருந்து, சோலைபாடி பறவை, சோலைமந்தி, டிங்கோ நாய், டோடோ பறவை, திருக்கை மீன், தூக்கணாங்குருவி, தேவாங்கு, நத்தை குத்தி நாரை, நாகணவாய்ப்புள், நார் கொண்டம் இருவாசி, நையாண்டிக் குருவி, பண்டா கரடி, பூநாரை, பென்குவின், மீன்கொத்தி, முள்ளம்பன்றி, முள்ளெலி, கரியால் முதலை, நைல் முதலை, மூங்கணத்தன், வரகுக் கோழி, வரையாடு, வல்லூறு, வெள்ளைப்புலி, கொண்டு கரிச்சான் குருவி, எப்போதும் ஜோடியாகவே இருக்கும் சாரஸ் பறவைகள், வெளிமான் (blackbuck) என்று தொடர்கிறது அவரது பட்டியல்.

நைரோபியின் நக்கூரா ஏரியில் உலகின் மிகப்பெரிய பறவைக் கூட்டம் இருப்பதை முப்பது கி.மீ. தூரத்தில் இருந்து பார்த்து ஆச்சரியமடைகிறார். அவை பூநாரைகள் எனப்படும் flamingo பறவைகள். தொலைவிலிருந்து பார்க்கும் போது தாமரை பூத்த தடாகம் போலிருக்கிறதாம்.  ஒரே சமயத்தில் பத்து லட்சம் பறவைகள் இங்கிருக்கின்றன. நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. புத்தகத்தின் அட்டையில் தாமரை தடாகத்துக்குப் பதில் பூநாரை கூட்டத்தைப் போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

lake-nakuru-flamingos-12[2]

Flamingo-Lake-Nakuru-Kenya2

அழிந்துவிட்ட டோடோ எனும் பறவையின் எஞ்சிய எலும்புகளை வைத்து தயாரிக்கப்பட்ட பறவை வடிவத்தை பார்த்தால் மனிதனின் சுயநலம் எந்தளவுக்கு கானுயிர்களை வதைக்கிறது என்பதை அறியலாம். மொரிஷியஸ் தீவில் இருந்த இந்தப் பறவை மனிதர்கள் அருகே வந்தால் கூட எதுவும் செய்யாமல் சாதுவாக இருக்குமாம். அதனால் அதனை கண்டபடி வேட்டையாடி இல்லாதொழித்து விட்டனர். ஒருவேளை பாம்பு போல் சீறியிருந்தால் தப்பியிருக்குமோ என்னவோ?

நீலகிரி பழங்குடியினமான தொதுவர் எனும் தோடர்களின் நலன் காத்த இவாம் பில்ஜின் என்ற பெண்மணி, அழிந்து வரும் பறவையினங்களை மீண்டும் உருவாக்கி பெருக்கி வரும் கார்ல் ஜோன்ஸ் எனும் இளைஞர், சேலையூர், கிண்டியில் பாம்பு பண்ணை உருவாக்கிய ராமுலஸ் விட்டேகர், வேங்கைகளைப் பற்றி இருபது வருடங்களுக்கு மேலாக ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உல்லாஸ் கரந்த், ஒலியற்ற வசந்தம் (silent spring) எனும் நூலைப் படைத்து DDT பூச்சிக் கொல்லிக்கு எதிராகப் போராடிய ரேச்சல் கார்சன், நிலத்தைப் பண்படுத்த வேண்டாம், பூச்சிக் கொல்லி வேண்டாம், களைக்கொல்லி, ரசாயன உரம் வேண்டாம், எளிய வாழ்க்கையே போதும் என்று ஒற்றை வைக்கோல் புரட்சி நூலை எழுதிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசனொபு ஃபுகோக்கா, அனிமல் பிளானெட் சேனலின் சாகச வீரர் ஸ்டீவ் இர்வின் என்று கானுயிர் ஆர்வலர்கள், கானுயிர் பாதுகாவலர்கள் பற்றிய கட்டுரைகள் கானுயிர் குறித்து அறிந்து கொள்வோருக்கும், கானுயிர் வளம் காக்க முயற்சிப்போருக்கும் மிகுந்த உற்சாகம் அளிப்பவை.

மத்திய அரசின் உயர்ந்த பதவியில் இருந்தது தியோடர் பாஸ்கரனுக்கு வாய்ப்புகளை எளிதில் பெற உதவியிருக்கும் என்ற போதிலும், இந்தியா மட்டுமின்றி, தன்சானியா, ஜாம்பியா, கென்யா என்று கானுயிர் தேசம் நிறைந்த ஆப்பிரிக்கா வரையும் சென்று கானுயிரைக் கண்டு வர அவருக்கு உதவியது அவரது ஆர்வமே எனலாம்.

அவரது கானுயிர் அனுபவத்தின் தொகுப்பான இந்த தாமரை பூத்த தடாகம்- மலர்ந்து செழித்து மணம் வீசும் கட்டுரை நூல்.

தாமரை பூத்த தடாகம்- தியோடர் பாஸ்கரன்உயிர்மை பதிப்பகம், பக்கம்- 160, விலை ரூ.100

Advertisements