உலக சினிமா · சினிமா · திரைப்படம் · ரோப் · விமர்சனம் · ஹிட்ச்காக்

ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ‘ரோப்’ (Rope) – ஒரு ஸ்டேஜ் த்ரில்லர்

த்ரில்லர் சினிமா இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது சைக்கோ என்ற திரைப்படம் பார்க்காத உலக சினிமா ஆர்வலர்களும் இருக்க முடியாது. ஹிட்ச்காக் முதன்முதலில் டெக்னிகலரில் எடுத்த திரைப்படம் ரோப் (Rope). இப்படம் 1948-ல் வெளியானது. இதன் பிளாட் விவாதத்துக்கு உரியதாக இருந்தது போலவே அதன் டெக்னிக்கல் அம்சத்துக்கும் பாராட்டப்பட்டது.

இந்தப் படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். பேட்ரிக் ஹாமில்டன் என்பவரது நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் 80 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் படம் முழுவதும் 10 ஷாட்களே உள்ளன. ஒவ்வொன்றும் குறைந்தது 4 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரையிலான நீளமான ஷாட்கள். ஒரே செட், கேரக்டர்களோட பயணிக்கும் கேமரா என்று படம் முழுக்க அமர்க்களப்படும்.

கலை கலைக்காக என்பது போல கொலை கொலைக்காக என்பதே இதன் தீம். ஒருவர் இன்னொருவரை கொலை செய்ய முடியும் என்றால் அதை நிரூபிக்க கொலை செய்ய வேண்டும் என்ற நீட்ஷேவின் தத்துவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது இப்படம். மற்றொன்று கதையி்ல் வரும் முக்கிய பாத்திரங்களின் உறவு முறை. இது விவாதத்துக்கு உரியதாக இருந்தது. அந்த இருவரும் ஒரு பாலின உறவாளர்கள். இதனால் இந்தப் படத்துக்கு அமெரிக்காவில் அப்போது அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

பிரான்டன் (ஜான் டால்), பிலிப் (ஃபார்லி கிரேங்கர்) இருவரும் நண்பர்கள். அவர்களது நண்பன் டேவிட் கென்ட்லி. முதல் சீனிலேயே பிரான்டனும், பிலிப்பும் சேர்ந்து ஒரு கயிற்றால் டேவிட்டின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்கிறார்கள். பிறகு அவன் இறந்ததை உறுதி செய்துவிட்டு ஒரு பெரிய மரப்பெட்டியில் பிணத்தைப் போட்டு மூடுகிறார்கள். இதற்குப் பின்னர் பிரான்டன் தைரியமாக இருந்தாலும் பிலிப் ஏனோ பதற்றத்திலும் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்திலும் இருக்கிறான். அவனுக்குத் தைரியம் சொல்கிறான் பிரான்டன்.

அன்று நடக்கவிருக்கும் பார்ட்டிக்கு இவர்களின் ஆசிரியர் ரூபர்ட் (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்), டேவிட்டின் தந்தை, அத்தை, டேவிட்டின் காதலி ஜேனட், ஜேனட்டின் முன்னாள் காதலன் கென்னத், வீட்டு வேலைக்காரி கலந்து கொள்ள வருகிறார்கள்.

பெட்டி இருக்கிறது. பெட்டிக்குள் டேவிட் பிணமாகக் கிடக்கிறான். என்ன செய்வது என்று கேட்கிறான் பிலிப். அந்தப் பெட்டியை ஒரு துணியைப் போட்டு முடி அதன் மேல் மெழுகுவர்த்தி ஸ்டேன்ட், உணவுத் தட்டுகளை வைத்துவிடலாம் என்கிறான் பிரான்டன். அவன் செய்த கொலையை ஒரு கலை என்றே உணர்கிறான் பிரான்டன். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கிறது. அப்போதுதான் பெட்டியின் வெளியே டேவிட் கழுத்தில் சுற்றி இருக்கும் கயிறு வெளியே தொங்குவது தெரிகிறது. பிரான்டனை அழைக்கிறான் பிலிப். நீயே காட்டிக் கொடுத்துவிடுவாய் போலிருக்கிறது என்று கடிந்து கொண்டு கயிறை வெளியே எடுக்கிறான் . அதாவது அவர்களாகவே கண்டுபிடிக்கட்டும் என்கிறான். வந்திருப்பது கென்னத். அவனை வரவேற்று மது அளிக்கிறார்கள். ஜேனட்டும் வருவதாக அவனிடம் சொல்கிறான் பிரான்டன்.

பிறகு ஒவ்வொருவராக வந்து சேர பார்ட்டி துவங்குகிறது. ஆனால் டேவிட்டை மட்டும் காணவில்லை. எல்லோருக்கும் சந்தேகமாக இருக்கிறது. டேவிட் இவ்வாறு பார்ட்டிக்கு நேரம் கழித்து வருபவனும் அல்ல. வீட்டிலும் தகவல் சொல்லவில்லை என்கிறார் டேவிட்டின் அப்பா. நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் பிரான்டனின் ஆசிரியர் ரூபர்ட் (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்) சந்தேகம் அடைகிறார். தான் செய்த தவறை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக ஓவர் ஸ்மார்ட்டாக நடந்து கொள்கிறான் பிரான்டன். ஆனால் பிலிப்பால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஒயின் கிளாஸை கையால் அழுத்தி உடைத்து காயப்படுத்திக் கொள்கிறான்.

அப்போது அவர்களுக்குள் ஒரு விவாதம் வருகிறது. தாழ்ந்த மக்களை உயர்ந்த மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிறான் பிரான்டன். தாழ்ந்த மக்களுக்கு (inferior) உயர்ந்தவர்களே (superior) வழி காட்ட வேண்டும். அவர்களுக்கு நாம் தேவை என்கிறான். தாழ்ந்தவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்கிறான். யார் அதைச் செய்ய உரிமை கொண்டவர்கள் என்று கேட்கிறார் டேவிட்டின் அப்பா. யார் வேண்டுமானாலும் நான், பிலிப், கென்னத் என்று யார் வேண்டுமானாலும் கொல்லலாம் என்கிறான். இது ஹிட்லரின் மனப்போக்கைப் போலிருக்கிறது என்கிறார் டேவிட்டின் அப்பா. ஹிட்லர் உணர்ச்சிவசப்பட்டு செய்தார். ஆனால் நான் சொல்வது அறிவுக் கூர்மையுடன் கொலை செய்வது என்று மறுக்கிறான் பிரான்டன். இதில் கோபமடையும் டேவிட்டின் அப்பா, மகனைக் காணவில்லை என்று கூறி வீட்டுக்கு அவசரமாகக் கிளம்புகிறார். போகும்போது அவருக்குப் பரிசாக சில புத்தகங்களைக் கொடுக்கிறான் பிரான்டன். அந்தப் புத்தகத்தைச் சேர்த்துக் கட்டியிருக்கும் கயிறு அவரது மகனைக் கொலை செய்யப் பயன்படுத்திய கயிறு என்பதை பிலிப் கவனிக்கிறான். அதை ரூபர்ட்டும் கவனிக்கிறார்.

டேவிட்டுக்கு பார்ட்டி நடக்கும் செய்தியையே நீ சொல்லவில்லை என்று பிரான்டனைத் திட்டிவிட்டுச் செல்கிறாள் ஜேனட். கென்னத்தும் உடன் செல்கிறான். இப்போது ரூபர்ட், வேலைக்காரி மட்டுமே இருக்கிறார்கள். பேசிக் கொண்டே வந்து டேவிட் கிடக்கும் பெட்டியின் மேல் இருக்கும் மெழுகுவர்த்திகளை அணைத்துவிட்டு எடுக்கிறாள் வேலைக்காரி. அதன் மேல் இருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு துணியையும் எடுக்கிறாள். இப்போது பிரான்டன், பிலிப், ரூபர்ட், வேலைக்காரி எல்லோரும் அங்கே நிற்கிறார்கள். எதேச்சையாக வேலைக்காரி பெட்டியைத் திறக்கும் போது பிரான்டன் அவளை வேறு வேலை பார்க்கச் சொல்கிறான். இதுவும் ரூபர்டுக்கு சந்தேகம் தருகிறது.

விவாதத்தின்போது கோழியின் கழுத்தை பிலிப் நன்றாக இறுக்குவான் என்று சொல்கிறான் பிரான்டன். இல்லை என்று கடுமையாக மறுக்கிறான் பிலிப். நான் ஒருபோதும் கோழியை கழுத்தை நெரித்துக் கொன்றதில்லை என்கிறான். ஆனால் பண்ணையில் அவ்வாறு அவன் செய்ததைக் கவனித்துள்ளதாக ரூபர்ட் கூறுகிறார். இதனால் கோபமடைகிறான் பிலிப்.

பார்ட்டி முடிந்து கிளம்பும்போது தனது தொப்பியை எடுக்கச் சொல்கிறார். வேலைக்காரி தொப்பியைத் தருகிறாள். ஆனால் அது வேறு தொப்பி. இது என்னோடதல்ல என்று சொல்லி அவருடைய தொப்பியை எடுக்கச் சொல்கிறார். அந்தத் தொப்பியின் உள்ளே டி.கே. என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆக, டேவிட் இங்கேதான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் ரூபர்ட். வெளியே செல்கிறார். தனது சிகரெட் பெட்டியை மறந்துவிட்டதாகக் கூறி திரும்ப வருகிறார். யாருக்கும் தெரியாமல் பெட்டியின் மேல் அவரே அதை வைத்துவிட்டு, இதோ இங்கே இருக்கிறது என்கிறார். அப்போது திடீரென பெட்டியைத் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

நீங்கள் இந்தக் கலையைப் பாராட்டுவீர்கள் என்று நினைத்தோம் என்று ரூபர்ட்டிடம் பிரான்டன் கூறுகிறான். ஆனால் “உங்களுக்குப் போதித்த தத்துவத்தை என்னிடம் பிராக்டிகலாகக் காட்டுகிறீர்கள். அவனை தாழ்ந்தவன் என்று கூறவும், அவனைக் கொல்லவும் நீ என்ன கடவுளா, யார் உனக்கு உரிமை கொடுத்தது” என்று ஆக்ரோசமாகக் கேட்கிறார் ரூபர்ட். செய்வதறியாது நிற்கும் பிரான்டன் பாக்கெட்டில் இருந்து பிஸ்டலை எடுக்கிறான். பிறகு அதை டேபிளில் வைக்கிறான். உடனே அதை எடுத்துக் கொள்கிறார் ரூபர்ட்.

நீங்கள் செய்தத் தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறி சன்னலைத் திறந்து வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டுவிட்டு அமைதியாக உட்காருகிறார். அப்போதும் பிரான்டன் ஒரு பெக் பிராண்டி குடிக்கிறான். வெளியே மக்கள் என்ன சத்தம் என்று பேசிக் கொள்கிறார்கள். அமைதியான அந்த கடைசிக் காட்சியில் போலீஸ் வருவதற்கான அறிகுறியாக தூரத்தில் இருந்து சைரன் சத்தம் மெல்ல மெல்ல அவர்களது அப்பார்ட்மென்ட் நோக்கி வருகிறது. திரை இருள்கிறது.

பிரான்டனுக்கு அடிபணிபவனாக நடித்திருக்கிறான் பிலிப். அவர்களுக்குள் ஓரின உறவு உள்ளது என்பதை எந்த விளக்கமும் காட்சியும் இல்லாமல் அவர்களது முக பாவனையிலேயே காட்டியிருக்கிறார் ஹிட்ச்காக்.

சைக்கோ போன்ற பிரமாதமான த்ரில்லராக இல்லாவிட்டாலும், வெறும் வசனங்களிலேயே த்ரில்லிங்கை கொடுக்கிறது இந்தப் படம்.

இந்தப் படத்தின் டிரைலர் இங்கே

Advertisements

8 thoughts on “ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ‘ரோப்’ (Rope) – ஒரு ஸ்டேஜ் த்ரில்லர்

  1. //சைக்கோ போன்ற பிரமாதமான த்ரில்லராக இல்லாவிட்டாலும், வெறும் வசனங்களிலேயே த்ரில்லிங்கை கொடுக்கிறது இந்தப் படம்.//அதெப்படி விட முடியும்…ஹிட்ச்காக் படமாச்சே…நல்ல பதிவு….பாத்துட்டு வரேன்…

கருத்து சொல்க

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s