எழுத்தாளர்கள் · சினிமா · தமிழ்மகன் · நாவல் · புத்தகம் · விமர்சனம்

ஏவி.எம்.ஸ்டுடியோ- ஏழாவது தளம்

பிரகாசமாக எரியும் விளக்கின் கீழே எப்போதும் இருக்கும் இருளைப் போல மனதை மயக்கும் பிரமாண்டங்களின் உள்ளே விசித்திரங்களும் அபத்தங்களும் நிறைந்திருக்கின்றன. எளிய மனிதனுக்கு வெளிச்சமும் பகட்டும் மட்டுமே தெரிகின்றன. அல்லது அதை மீறிப் பார்க்க அவன் முயற்சிப்பதில்லை. விருப்பம் கொள்வதும் இல்லை.
பட்டுச் சேலையின் பளபளப்பின் ஊடே பட்டுப் புழுக்களின் ஓயாத மரண ஓலம்
ஒலித்துக் கொண்டிருப்பதை யாதொரு பெண்ணும் அறிந்திருப்பாளா எனத் தெரியவில்லை. தங்க, வைர மினுமினுப்பின் அடியில் சூழ்ந்திருக்கும் மையிருட்டில் இருந்து வறண்ட புன்னகையுடன் வாழ்வின் மிச்சத்தை எதிர்நோக்கும் முகங்களை யாரேனும் தெரிந்திருக்கிறார்களா?
ஒருவேளை அவர்களுக்கான வாழ்வாதாரமே, அந்த வெளிச்சத்தையும்
பிரமாண்டங்களையும் கேள்விகளற்று ஏற்றுக் கொள்ளும் எளிய மனிதர்கள் தானோ என்பதே தமிழ்மகன் எழுதிய ஏவி.எம்.ஸ்டுடியோஏழாவது தளம் நாவல் ஊடே பயணித்தபோது ஏற்பட்டது.

கதையும் சரி, புத்தகமும் சரி அதிக கனமில்லை. ஆனால் கதை மாந்தர்களின் செயல்களும் வாழ்பனுபவமுமே படித்து முடிக்கையில் கனத்தை ஏற்படுத்துகிறது. எர்நெஸ்த் ஹெமிங்க்வே எழுதிய கிழவனும் கடலும், ஹெர்மன் ஹெஸ்ஸெவின் சித்தார்த்தன் போன்றவை பக்க அளவில் சிறியவையே. ஆனால் உள்ளடக்கத்தில்…?
நாவலை அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து
எழுதியுள்ளார் ஆசிரியர் தமிழ்மகன். ஆனால் தலைகீழாக. காமம், சினிமா பொருளாதாரப் பிரச்னை, தத்துவம் என்று கதை நகர்கிறது. உச்சத்தில் இருந்து மெதுவாக சமநிலைக்கு வரும் ஓட்டப்பந்தைய வீரனின் மூச்சைப் போல.

இன்பத்துப் பால்

நடிகர்களின்வரலாற்றைஅறிந்திருக்கும் தமிழ் கூறும் நல்லுலகு சற்றேனும்ஒரு நடிகையின் கதையை கிசுகிசுவாகவோ, வேறெப்படியோ தெரிந்துதான் வைத்திருக்கிறது. ஆனால் இழப்பின் வலி எத்தகையது என்பது அதை அறிந்தவர்களால் தான் உணர முடியும். எதையும் இழக்கத் தயாராக உள்ள பெண்ணுக்கு நடிகை ஆவது அத்தனை கடினம் இல்லை. ஆனால் தன்னை நிலை நிறுத்த அதற்கும் மேலே செல்ல வேண்டியுள்ளது என்பதை அறிகிறாள் நடிகை தீபிகா.
எல்லோருக்குள்ளும் ஒரு சோகக் கதை இருப்பதைப் போல தீபிகாவையும் பின்
தொடரும் கதையை தவிர்க்க முடியவில்லை. தனது தாயை ஏமாற்றிச் சென்ற தந்தை யார் என்பதை அவள் மூலம் தெரிந்து கொள்கிறாள். ஆனால் தாய் இறந்த பின் ஆதரவு இல்லாத அவள் ஒரு பத்திரிகை விளம்பரம் பார்த்து நடிகை ஆக வேண்டும் என உடுமலையில் இருந்து சென்னை வருகிறாள். அங்கே வெற்றியும் பெறுகிறாள்.
அவள் நடிகையானது இன்பத்துப்பால் பகுதியில் உற்சாகத்துடன் செல்கிறது. திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பத்திரிகையாளராக ஆசிரியர்
தமிழ்மகனுக்கு ஏராளமான அனுபவங்கள் உள்ளது என்பதை ஒவ்வொரு வரியும் சொல்கிறது. வாசகனுக்குள் இருக்கும் ரசிகனை கட்டி இழுத்துச் சென்று படப்பிடிப்புத் தளத்தில் தள்ளிவிட்டு, பார் உன் தேவதைகளை, இதய தெய்வங்களைஅவர்தம் நிஜத்தை என்று தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்.

நடிகைக்கு முதல் பாடமேகூச்சம் தவிர்’- புதிய ஆத்திச் சூடி என்கிறார்.

திரையில்
தெரியும் பிரமாண்டம் நிறைந்த, அதன் பின்னே இருப்பவர்கள் நான்கு
கைகளும், ஒளிவட்டமும், சக்ராயுதமும் கொண்டோர் அல்ல; எளிய மனிதனின் இச்சை, பொறாமை, வஞ்சம், ஏமாற்றுதல் என்று அனைத்தும் சற்று அதிகமாகவே கொண்ட சராசரிக்கும் கீழான மனிதர்களே என எண்ண வைக்கும் ஹீரோக்கள் வினோத், பவன் சுந்தர், இயக்குநர் அர்விந்த, தயாரிப்பாளர் ஏழுமலை ஆகியோர் வெறும் கதை மாந்தர்கள் அல்ல, திரையுலகின் பிரதிநிதிகளே.
//இழக்கிற கற்பை கொஞ்சம் துணிச்சலாக இழக்க வேண்டும். அதே நேரத்தில் அதில் விபசார அர்த்தம் வந்துவிடக் கூடாது. காமம் கலந்த நாடகம். எதை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தீபிகாவுக்குப் புரிந்தது// என்ற வரிகளே முதல் பகுதியை நம்மை வேகமாகக் கடக்க வைக்கிறது.
ஹீரோ, கிழ ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என்று தீபிகாவின் மீது ஏற்படும்
பொருந்தாக் காமம் அங்கே இயல்புக் காமம் ஆகியிருக்கிறது. தன் தாயை ஏமாற்றியவர் பிரபல இயக்குநர் பரணிகுமார் என்பது தெரிந்து அமைதியாக இருக்கிறாள் தீபிகா, தனது வளர்ச்சிக்காக. தீபிகா தன் மகள் என்பது அறிந்ததும் உணர்ச்சிவசம் அடையும் பரணிகுமாருக்கு ஏற்படும் சோக நிகழ்வு நம்மையும் தொற்றுகிறது.
அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சினிமா நிருபர் ஸ்ரீராம் மட்டுமே.

பொருட்பால்

திரையுலகின் போட்டி, பொறாமைக்கு இடையே கோடம்பாக்கத் தெருக்களில் அலையும் உதவி இயக்குநர்களின் பிரதிநிதியாக மகேஷ். தனக்குள் பல ஹீரோக்களுக்குத் தேவையான கதைகளுடன் அலைகிறான் 14 வருடங்களாக. ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. அதில் தீபிகா ஹீரோயின். அலைகள் ஓய்வதில்லை படம் முடியும் இடத்தில் அவனது படம் துவங்குகிறது. ஊரை விட்டு ஓடிப் போனவர்கள் எப்படி வாழ்க்கையில் போராடுகிறார்கள் என்ற கதையை படமாக்குகிறான். உண்மையில் தமிழ்மகனே கதையை கொண்டு செல்கிறார் சிரிப்பும் சிந்தனையுமாக. படம் ஹிட் ஆகிறது. (ஆசிரியர் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். இதே கதை எங்காவது, எப்பவாவது திரைப்படம் ஆகலாம்.)
தீபிகாவுக்குள் ஸ்ரீராம் மீதான காதல் இழையோடுகிறது. ஆனால் முடிவு
எடுக்காமல் பழைமைக்கும், புதுமைக்கும் இடையே ஊசலாடும் ஸ்ரீராம், தற்போதைய முன்னாள் நடிகைகளின் கணவர்களின் மனசாட்சிதான்.
ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள், நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள், ஃபைனான்ஸியர்கள், பிஆர்ஓக்கள், மேக்கப் மேன்கள், சினிமா நிருபர்கள் என்று
சாதாரண ரசிகன் பயணிக்காத, பயணிக்க விரும்பாத சினிமாவின் மற்றொரு சித்திரம் இப்பகுதியில் அசைகிறது.
அப்போதும் மிச்சமிருக்கும் தீபிகாவின் காதலை ஏற்க ஸ்ரீராம் நினைக்கையில், அவள் மகேஷின் மனைவியாகிறாள்.

அறத்துப்பால்

தீபிகாவின் இயக்குநர்கணவன் எடுத்த படம் பிளாப் ஆகிறது. மீண்டும் தன்னை நிரூபிக்கும் வெறி. ஹீரோ அவனே. ஹீரோயின் தீபிகா. படம் பாதியில் நிற்கிறது. நமக்கு நிஜ முகங்கள் நிழலாடுகின்றன. அவளை தயாரிப்பாளரிடம் படுக்க சொல்கிறான். அவள் மறுக்கிறாள். இப்படி, அரிதாரங்களின் பின்னிருக்கும் அபத்தம் எளிய ரசிக மனதை வெறுமை மனநிலைக்கு கொண்டு செல்கிறது.
ஒரு அநாதையான, அதுவும் நடிகையான அவளுக்கு பணம், புகழ்
தேவைப்படவில்லை. உண்மையான அன்புக்கே ஏங்குகிறாள். குத்தாட்டம் போடும் ஒவ்வொரு நடிகைக்குள்ளும் இப்படியான ஓராயிரம் நிராசைகளின் சத்தம் ஓலமிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
கிழ ஹீரோ பவன்சுந்தர் கட்சி தொடங்குகிறார். தன் கணவனின் பணத்
தேவையை சமாளிக்க அவனிடம் சரணடைகிறாள் தீபிகா. ஆனால் அவளே எதிர்பார்க்காத ஒன்று, கட்சியில் கிடைக்கும் அங்கீகாரம். பிறகு என்ன ஆகிறாள் என்பதை 60களுக்குப் பின் வந்த சினிமாநிஜ உலகின் நட்சத்திரங்களின் வாழ்வோடு நம் மனது தொடர்புபடுத்தி பார்ப்பதை அவ்வளவு எளிதில் நிறுத்திவிட முடியாது.
தலைப்புக்கு ஏற்ப அறம் கூறும் பகுதியாக இப்பகுதியை அமைத்துள்ளார்
ஆசிரியர்.
//நிம்மதியை விற்று பெருமை சேகரிக்கிறார்கள், சுயமரியாதையை விற்று கார் வாங்குகிறார்கள், அமைதியை விற்று வீடு வாங்குகிறார்கள், கற்பை விற்று புகழைத் தேடுகிறார்கள், பண்பை விற்று பணம் சேர்க்கிறார்கள். எதற்கு எது ஈடு என்று புரியவில்லை. இதைவிட இது சிறந்தது என்பது மாறிவிட்டது…//
நாவலின் மையப் புள்ளி இதுதான்.

கட்சியில் ஒரு கோடி ரூபாய் கொடுத்து சேர்த்துக் கொண்ட துணைப் பொதுச்
செயலாளர் தீபிகாவின் பேச்சாற்றல் கண்டு பேசத் தெரியாத கிழ ஹீரோகம்கட்சித் தலைவர் பவன்சுந்தருக்கு ஏற்படும் மனப்புழுக்கம், வெறும் பிம்பத்தை வைத்து கட்சி ஆரம்பித்தவன் கதை இதுதான் என்பதை அவன் உணரும் போது, வாசகனுக்குள்ளும் வந்து போகிறார்கள் பல புதுக்கட்சித் தலைவர்கள்.

//உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறுஎன்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னது மக்களுக்கு மிகச் சரியாகப் புரியும்படிதான் இருந்தது தமிழ் சினிமா உலகம். ஜெயகாந்தன் இதையும் சேர்த்துக் கொண்டிருக்கலாம். “தமிழ் சினிமா உலகம் முற்றிலும் வேறு’// உண்மைதான்!
இறுதியாக முன்னாள் நடிகையாக அரசியல் கட்சியில் சேர்ந்த தீபிகா
என்னவாகிறாள் என்பதை வெகு நேர்த்தியாக முடித்திருக்கிறார் தமிழ்மகன். ஆனால் அங்கிருந்து திரையுலகம், நிஜ உலகம் இரண்டிலும் பயணிக்கத் துவங்குகிறது வாசகனின் மனம்.

செல்லுலாய்டு தெய்வங்களைப் போற்றும் ரசிகர்களின் மனம் எளிமையானவையே என்பதை உணர்ந்தால், கனவுத் தொழிற்சாலை, கரைந்த நிழல்கள், சினிமாவுக்குப் போன சித்தாளு, கன்னியாகுமரி வரிசையில், இக்கதையின் உள்ளே உள்ள தீவிரத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

ஏவி.எம்.ஸ்டுடியோஏழாவது தளம் ஆசிரியர்தமிழ்மகன், பக்கம் 192, முற்றம் வெளியீடு, சென்னை. விலைரூ.60

Advertisements

13 thoughts on “ஏவி.எம்.ஸ்டுடியோ- ஏழாவது தளம்

  1. நாவல் பெண்ணிய நோக்கில் எழுதப் பட்டிருக்கும்னு நினைக்கிறன். படிக்கத் தூண்டும் விமர்சனம்.

  2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்http://www.ulavu.com(ஓட்டுபட்டை வசதிஉடன் )உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….இவண்உலவு.காம்

  3. படித்துவிட்டேன், விவாதிப்பதற்காக தான் தேடினேன். அப்போது தான் இதனைக் கண்டேன். படிக்க துண்டும் நல்ல விமர்சனம் தான். உணர்வுப் பூர்வமாக கதை என்னை தொடவில்லை. பெண்ணியத்தை என்னும் ஆழமாக வெளிப்படுத்தி இருக்கலாம். நடிகையின் வாழ்க்கை பதிவில் அவளின் மனரிதியான வலியை வெளிப்படுத்த மறந்துவிட்டகாக தோன்றுகிறது

கருத்து சொல்க

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s